இயக்குநர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் கதிரவன் 'மீண்டும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சரவணன் சுப்பையா அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிட்டிசன் படத்தையும், ஷியாம் நடிப்பில் வெளியான ஏபிசிடி ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கதிரவன் நடிக்கும் 'மீண்டும்' படத்தை இயக்கியுள்ளார். இதில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார்.இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலை இப்படத்தில் பேசியுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, எஸ்.ஏ சந்திரசேகர், ரங்கராஜ் பாண்டே, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய நாஞ்சில் சம்பத்," மீண்டும் என்ற திரைப்படம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரவிருக்கிறது. அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கின்றார் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார். சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு தமிழ் இந்துவில் செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். 'எல்கேஜி' படத்தில் நான் நடித்த பிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும் எனக் கூறியுள்ளார்
இதை தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு," சினிமாவுக்கு பயங்கர சக்தி இருக்கிறது. யாரெல்லாம் சினிமாவை விமர்சித்தார்களோ அவர்களையெல்லாம் சினிமா அரவணைத்து விட்டது. சாலமன் பாப்பையா, ராஜா, திண்டுக்கல் லியோனி, ரங்கராஜ் பாண்டே என அனைவரையும் சினிமா தனக்குள் இழுத்து விட்டது. இவர்கள் எல்லாம் சினிமாவில் நடித்து விட்டார்கள். 'மீண்டும்' திரைப்பட இயக்குநர் சரவணன் சுப்பையா அவரை சுற்றி மிகப்பெரிய நட்பு வட்டமிருக்கும் திறமையானவர். இப்படம் எப்போதோ வெளிவர வேண்டியது. என்ன காரணமோ தாமதமாகி விட்டது. இப்போது சினிமா சிக்கலில் இருக்கிறது. முன்பெல்லாம் ரிலீஸுக்கு முன் பிரச்சனை வரும் இப்போது ரிலீஸுக்கு பிறகு பிரச்சனை வருகிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. 500, 600 படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் தீர்வு காண வேண்டும். சினிமாவை வைத்து யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு முதல் போட்டவர்கள் சம்பாதிக்க முடியவில்லை. 'மீண்டும்' பட ட்ரைலர் சூப்பராகவும், தரமாகவும் இருக்கிறது. இந்த படம் மிக பெரிய வெற்றி அடையும் " என்றார்.