சித்திரை முதல் நாள், ஆங்கில ஆண்டில் வருகிற 14 ஆம் நாள் (14.04.2023) தமிழ்ப் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்பு 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக அரசு, திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஏப்ரல் 14 ஆம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்திருந்தது.
அதன்படியே மக்களும் கொண்டாடி வந்தனர். பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடபட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் ஏப்ரல் 14ஆம் தேதியே தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "உங்களுக்கு ஓர் முக்கியமான செய்தியை சொல்ல போகிறேன். அனைவரும் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடி வருகிறோம். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பிரம்மாண்டமாக வரவேற்கிறோம். ஆனால் அது நமது கலாச்சாரம் கிடையாது. அது நம்முடைய பாரம்பரியம் கிடையாது.
நாம் எல்லாம் பெருமை மிகு இந்தியர்கள். வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வருகிறது. அதனை உங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். காலையில் எழுந்து குளிச்சிட்டு கோவில் போய்ட்டு வாருங்கள். உங்கள் பெற்றோரிடம் ஆசி பெறுங்கள். அதுதான் நம்முடைய கலாச்சாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31 நம்முடைய புத்தாண்டு கிடையாது. ஏப்ரல் 14 ஆம் தேதி தான் நமது புத்தாண்டு" என பேசியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பெருமை மிக்க பாரத நாட்டில் வாழ்கின்ற மிகத் தொன்மையான தமிழர்களாகிய நமது ஒரே புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வருகின்ற சித்திரை 1 ஆம் தேதி மட்டுமே... நிச்சயமாக, ஜனவரி 1 கிடையாது. ஆங்கிலப் புத்தாண்டு என்பது நமது கலாச்சாரமே கிடையாது. அனைவருக்கும் எனது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.