ஜி.வி. பிரகாஷ், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அடியே'. பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில், படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "இப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன். ஒரு இயக்குநருக்கு யாரையும் விமர்சித்து யாரையும் நகைச்சுவை கதாபாத்திரமாக காண்பிக்க முழுக்க முழுக்க உரிமை இருக்கு. தமிழ் சினிமாவில் நிறைய பேர் தெரியாத்தனமாக கதை எழுதும்போது ஒருவருக்கு ஒரு பெயர் வச்சிடுவாங்க. அதுக்கு டைரக்டர் மேல் கேஸ் போடுவாங்க. எந்த இயக்குநரும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பண்ணுவதில்லை. ஒரு பெயரை சினிமாவில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்.
நான் இப்போது எழுதி முடித்துள்ள கதையில் ஒரு கேரக்டருக்கு பெயர் வைக்க 15 நிமிஷம் யோசித்தேன். அப்புறம் யுவராஜ் என்று வைத்தேன். முதலில் இளையராஜா என் யோசிச்சேன். ஆனால் அது கேஸ் ஆகிடும். எங்க அப்பா தான் அவரு. இருந்தாலும் அவர் கேஸ் போட்டுவிடுவார். அதனால் என்னை எப்படி வேண்டுமானாலும் காட்டுங்கள், மோசமானவனாகவும் காட்டுங்கள். உண்மையில் நான் மோசமானவன் தான். அதற்கு முழு சுதந்திரம் இருக்கு." என்றார்.