ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்வில் விருதுக்கு தேர்வான அனைவருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். அப்போது உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு மரணத்திற்குப் பின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் முலாயமின் மகனும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் விருதை பெற்றார்.
ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாடு’ பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, ஜனாதிபதி முர்முவிடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். மேலும் சூப்பர் 30 கல்வித் திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமார் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மறைந்துவிட்டதன் காரணமாக அவர்களது உறவினர்களிடம் விருது வழங்கப்பட்டது.