பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி இப்படத்தை வெளியிடத் தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதன் பின்பும் பல்வேறு தடைகளையும் சட்ட போராட்டங்களையும் சந்தித்த இப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் “90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளதாகவும், அதனால் இப்படத்தை பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அத்துடன் இப்படத்திற்கு 100 சதவீத வரி விலக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்க்க மத்தியப் பிரதேச மாநில காவல் துறையினருக்கு விடுமுறை வழங்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைப் போன்று ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.