'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களைத் தொடர்ந்து மோகன்.ஜி இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தை 'ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிக்க செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து மோகன்.ஜி பேசுகையில், "கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் இரண்டு பேரும் நடிக்க வந்தது அவர்கள் எடுத்த முடிவு. நான் அவர்களை படத்தில் நடிக்க வாருங்கள் எனக் கூப்பிடவில்லை. ஏற்கனவே பல படங்களில் அவர்கள் நடித்துள்ளதால் அவர்களைப் பயன்படுத்தியுள்ளேன். அவர்களுக்கு விஷயத்தை புரியவைப்பது சுலபமாக உள்ளது. ஆனால், இது தொடர்ந்து நடக்குமா என்பது தெரியவில்லை. அடுத்து எந்த இயக்குநர் நடிக்க வருவார். அவருடன் நான் பணிபுரிவேனா என்பது தெரியவில்லை. நடிகர்களோடும் பணியாற்றுவேன், இயக்குநர்களோடும் பணியாற்றுவேன்.
சமுதாயத்தில் என்னைச் சுற்றி நடக்கிற விஷயத்தை படமாக எடுக்கிறேன். அது 'திரௌபதி' படத்திலிருந்தே அமைந்துவிட்டது. அடுத்த படத்திலும் தொடரும். என்னோட அடுத்த படமும் உண்மை சம்பவத்தை தழுவியதாக இருக்கும். மக்கள் விருப்பத்திற்கேற்ப தான் படம் எடுக்க வந்திருக்கிறோம். எங்கள் விருப்பத்திற்கு ஒரு படம் எடுத்து மக்களுக்கு கொடுப்பதில் உடன்பாடில்லை. மக்களுக்கு தெரியாத விஷயத்தை படமாக்கி அதை மக்களுக்கு கொடுப்பது தொடரும்.
அதற்காக சந்தோஷமும் படுகிறேன். பலதரப்பட்ட கருத்துகள் தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றன. இந்த மாதிரியான கருத்துகள் வரக்கூடாது எனப் பலர் நினைக்கிறார்கள். அதைத் தாண்டி நான் செய்யும் போது, அதனை மக்கள் வெற்றியாக்குவதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து அதனைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அப்படிச் செய்வது ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது" என்றார்.