ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்களின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து உடனடியாக அரசு சார்பில் திருப்பதி லட்டை ஆய்வுக்குட்படுத்தியதில், லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படமானது தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக அரசியலில் வெடித்தது. அதே சமயம் இயக்குநர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியை கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலக மோகன் ஜி. மீது திருச்சி சமயபுரம் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரியும் கவியரசு என்பவர் திருச்சி மாவட்ட காவல் துறையில் புகார் கொடுத்தார். அவர், பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பான விமர்சனத்தை மோகன் ஜி. கூறியுள்ளதாகவும் திருப்பதி லட்டு விவகாரம் அடங்குவதற்குள் தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பொய்யான செய்தியை பரப்பியுள்ளதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் சென்னை சென்று மோகன் ஜி-யை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். பின்பு திருச்சிக்கு அழைத்து சென்ற அவரை காவல்துறையினர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து அவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் கைதானது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் மோகன் ஜி. அவர் பேசியதாவது, “நேற்று எனக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை. நான் என் குழந்தையை ஸ்கூல் வேனில் அனுப்பி விட்டு திரும்பியவுடன் வீட்டு வாசலில் வைத்தே ஒரு 8 பேர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மப்டியில் இருந்ததால் போலீஸ் என அடையாளம் காணமுடியவில்லை. அவர்கள் அழைத்ததுமே என்னுடைய வழக்கறிஞரிடம் பேசிவிட்டும் மனைவியிடம் தகவல் சொல்லிவிட்டும்தான் வருவேன் என சொன்னேன். ஆனாலும் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் பக்கத்தில் இருக்கிற ராயபுரம் காவல் நிலையத்துக்குத்தான் கூப்பிட்டு போவதாக சொல்லி வலுக்கட்டாயமாக வாகனத்தில் அழைத்து சென்றனர். ஆனால் திருச்சிக்கு சென்றனர். நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் சரியான பதில் சொல்லவில்லை. நானும் என்னதான் நடக்கிறது என அமைதியாக இருந்தேன். பின்பு ஒரு வழியாக மாலை 5 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அப்புறம் கோர்ட்டுக்கு கொண்டு போய் ஆஜர்படுத்தினார்கள். அங்கு எனக்கு வழக்கறிஞர் பாலுவின் குழு எனக்கு நியாயம் வாங்கித்தந்தனர். நீதித்துறை மீது ரொம்ப அக்கறையுடவன் நான். சமூகத்தின் மீதும்.
பழனி பஞ்சாமிர்தத்தை பற்றி நான் பேசுவதற்கு காரணமே திருப்பதியில் இப்படி நடந்தது என முதலமைச்சரே வெளியில் சொன்ன தைரியத்தில் தான். தமிழ்நாட்டிலும் இது போல நடப்பதாக செவி வழியே கேட்டதால் சொன்னேன். அதிலும் அப்படி இருக்கலாம், அப்படி இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். அந்த நோக்கத்தில்தான் நான் பேசினேன். ஆனால் தவறான நோக்கத்தில் மக்களிடம் சேர்ந்திருக்கிறது. இந்த சூழலில் நான் பேசியதை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக கருத்து சொன்ன பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க.வை சேர்ந்த ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் இயக்குநர் பேரரசு மேலும் எனக்கு சாதகமாக பேசிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். சட்ட ரீதியாக இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வேன். நிச்சயமாக நான் சொன்ன விஷயத்தில் உண்மையாக இருக்கிற கருத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பேன். தனிப்பட்ட முறையில் யாருக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என சொல்லவில்லை. விழிப்புணர்வுக்காக சொன்னேன்” என்றார்.