பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி பேசியுள்ளார். அரணம் பட ஆடியோ வெளியீட்டில் பேசிய அவர், “ஒரு தரமான படைப்பு. இயக்குநர் ஷரத்திற்கும் ஜீ5க்கும் ரொம்ப நன்றி. இவ்வளவு நாள் ஒரு நெகட்டிவா தெரிஞ்ச வீரப்பன், இப்போ மக்கள் மத்தியில் பாசிட்டிவாக போய் சேர்ந்திருக்கார். ஏற்கனவே வட தமிழ்நாட்டில் அவர் ஹீரோதான். ஆனால், இன்றைக்கு தமிழகம் முழுக்க ஒரு ஹீரோ மாதிரி தெரிகிறார். நிறைய மாற்றுக் கருத்துகள் அந்த தொடரில் இருந்தாலும், என்ன காரணத்திற்காக வீரப்பன் என்கிற அவதாரம் எடுத்தார், எந்த வயசுல காட்டுக்குள்ள போய் மக்களுக்காக சண்டை போட முடிவெடுத்தார் என்பதை காமிச்சிருக்காங்க. ஒரு சினிமா நினைச்சா எவ்ளோ பெரிய நல்லவனையும் கெட்டவனா மாத்தும், எந்த ஒரு கெட்டவனையும் ஹீரோவாக மாற்றும். சினிமாவுக்கும் எழுத்துக்கும் அந்த பவர் இருக்கு.
இந்த தொடர் வீரப்பன் ஒரு கொலைகாரன், வில்லன் என முடிகிறது. அதுதான் உன்மையும் கூட. ஆனால் எந்த காரணத்திற்காக அதை பண்ணினார். சமூகத்தின் மேல் அவருக்கு இருந்த கோபம் என்ன என்பதை பல வருடங்களுக்கு பிறகு மக்களுக்கு தெரிய வருகிறது. இதுபோன்று நிறைய ஆளுமைகள் இருக்காங்க. மலையூர் மம்பட்டியான், அரியலூர் பக்கம் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், ஆறுமுகம் நாட்டார் இவர்களெல்லாம் அவங்கவங்க பகுதிகளில் என்ன காரணத்திற்காக மக்களுக்காக போராடினார்கள். அவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது, அதில் என்ன அரசியல் இருக்கு அதையெல்லாம் சினிமாவா எடுத்தா மக்கள் புரிஞ்சிப்பாங்க. அதயெல்லாம் சினிமாவில் மட்டும்தான் செய்ய முடியும். திரை சித்திரமாக பார்க்கும்பொழுது பெரிதாக மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும். அந்த வகையில் கூச முனுசாமி வீரப்பன் படக்குழுவிற்கு நன்றி” என்றார்.