ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்த நிலையில், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களில் வரும் இசையை ஒப்பிடும் போது, ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு கிடையாது. தாமதமாகவோ, முன்னதாகவோ ஒரு பாடலுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், இது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஆனால், அங்கீகாரம் வரவேண்டும் என்றபோது, அது ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தாவது வரும்” என்று கூறினார்.
முன்னதாக ஆஸ்கர் விருது வென்ற போது எம்.எம்.கீரவாணி கூறியதாவது, “நான் தச்சர்களின் சத்தத்தை கேட்டு வளர்ந்தேன். இப்போது நான் ஆஸ்கார் விருதுகளுடன் இருக்கிறேன். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றி பெற வேண்டும், ஒவ்வொரு இந்தியனின் பெருமையும், என்னை உலகின் உச்சியில் வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.