பிரபல மாடலாக வலம் வந்த மீனாட்சி சௌத்ரி, விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்’(கோட்) படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். அந்த வகையில் வெங்கடேஷ் நடிப்பில் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், கோட் படத்தில் நடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “விஜய்யுடன் கோட் படத்தில் நடித்ததால் என்னை மிகவும் ட்ரோல் செய்தார்கள். அதனால் ஒரு வாரத்துக்கு நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால் லக்கி பாஸ்கர் படத்தால் எனக்கு நிறையப் பாராட்டுக்கள் கிடைத்தது. அப்போதுதான் நான் நல்ல படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்றார். முன்னதாக இப்படத்தில் நடித்தது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பு சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் ஸ்ரீநிதி கதாபாத்திரம் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டு நன்றி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.