அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது. வசூல் ரீதியாக அவெஞ்சர்ஸ் படம் பெரும் சாதனையை படைத்துள்ளது. அதாவது அதிக வசூல் செய்த படங்களில் பல வருடங்களாக இரண்டாம் இடத்திலிருந்த டைட்டானிக் படத்தின் இடத்தை தற்போது எண்ட் கேம் படம் பிடித்துவிட்டது. மிக குறைந்த நாட்களிலேயே இரண்டு பில்லியன் வசூலை வாரி குவித்த படம் இது.
முதலில் படம் வெளியாகி அதன் வசூல் வேகத்தை பார்க்கும்போது முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் சாதனையை முறியடித்துவிடும் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அவெஞ்சர்ஸ் படத்தால் அந்த வசூலின் கிட்ட நெறுங்க முடிந்ததே தவிர முறியடிக்க முடியவில்லை. ஜான் விக் 3 படம் வெளியானதால் அவெஞ்சர்ஸ் படத்தின் வசூல் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மார்வல் ஃபேன் ஒருவர் 110 முறை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறார். படம் ஓடும் வரை பார்ப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது. ஏன் இத்தனை முறை தியேட்டரில் பார்த்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அவதார் வசூல் சாதனையை இப்படம் முறியடிப்பதற்காக என்னால் முயன்றதை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வெறித்தனமான மார்வல் ஃபேனின் பெயர் அகஸ்டஸ் அனாலிஸ்.