இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது.
இதற்காக நெதர்லாந்து சென்று விழாவில் கலந்து கொண்டது படக்குழு. அப்போது கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என இயக்குநர் ராம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரோட்டர்டாம் விழாவில் படத்திற்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவிக்கும் வீடியோவை படக்குழுவினர் சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் அஞ்சலி பகிர்ந்த அந்த வீடியோவை, இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இயக்குநரின் அடுத்த படைப்பான ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் அதிகமான பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு தன் பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனரின் அடுத்த படைப்பான “ஏழு கடல் ஏழு மலை” #RotterdamFilmFestival ல் அதிகமான பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு தன் பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது #directorram @yoursanjali @NivinOfficial @thisisysr @sooriofficial @sureshkamatchi 💐💐💐💐💐💐 https://t.co/iCrDMO280s— Mari Selvaraj (@mari_selvaraj) February 8, 2024