பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்படத்தை பாராட்டி ப்ரொமோட் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிராமணர்கள் வலியைக் காட்டுகிறது. அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் காட்ட தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல, மனிதர்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது பாஜகவினர் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, "ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானின் பதிவை பார்த்தேன். அவர் அரசு விதிமுறைகளை மீறியுள்ளார். இது ஒரு தீவிரமான பிரச்சனை. இவ்விவகாரம் குறித்து விளக்கமளிக்க ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.