Skip to main content

“காக்கா, கழுகு கதைகளால் ஒரு பிரயோஜனமும் கிடையாது” - வைரலாகும் லெஜண்ட் சரவணனின் பேச்சு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

legend  saravanan speech viral

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. 

 

இந்த நிலையில், சரவணன் அருள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதில் மேடையில் அவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் மிக வலிமை மிக்கதாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அதில் உள்ள உண்மைத்தன்மையும், கடின உழைப்பும் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

 

இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில், காக்கா, கழுகு கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் போன்ற விஷயங்கள்... இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும். உழைப்போம், உயர்வோம், நம் நாட்டையும் உயர்த்துவோம். அன்பால் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்