‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, 'ரைட்டர்' போன்ற படங்களை தயாரித்து வெற்றிக் கண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது கலையரசன் மற்றும் அஞ்சலிப்பாட்டில் நடித்துள்ள 'குதிரைவால்' படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்.
இப்படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு 'குதிரைவால்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதமானதால் அறிவித்த தேதியில் படம் வெளியிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 'குதிரைவால்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதனபடி மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கது.