சமீபத்தில் மறைந்த பிரபல நாடக ஆசிரியர், வசனகர்த்தா கிரேசி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சினிமா நாடகத்துறையை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு கிரேசி மோகனுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதன் ஒரு பகுதி...
"கிரேசி மோகன் மிக ஜாலியானவர், இயல்பானவர். எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பழக்கம் அவர். படங்களென்று பார்த்தால் ஐந்தோ, ஆறோதான் ஒன்றாக பண்ணியிருப்போம். ஆனா, நெருக்கமான நட்பு. கமல் சார், மக்கள் நீதி மய்யம் தொடங்கியதிலிருந்து நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ரொம்ப நாள் கழிச்சு, கிரேசி மோகன் சார் மரண செய்தி வந்ததும் எனக்கு கால் பண்ணார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினோம். முன்னாடி நான், கமல் சார் செட்ல இருந்தோமென்றால் தினமும் ஒரு முறையாவது பாலச்சந்தர் சார், நாகேஷ் சார் பற்றி பேசுவோம். இப்போ அந்த வரிசையில் சேர்ந்துட்டாரே கிரேசி மோகன் என்று கமல் சார் வருத்தப்பட்டார்.
அவ்வை சண்முகி படத்திற்கு முக்கிய காரணமே கிரேசி மோகன்தான். கதை, வசனம் எழுதினார் என்பதற்காக சொல்லவில்லை. முதலில் 'கண்டேன் சீதையை' அப்படின்னு ஒரு படம்தான் ஒரு மலையாள இயக்குனரை வைத்து அவர்கள் தொடங்கியிருந்தனர். ஆனால், அது சரியா வரலைன்னு பிறகு என்னை அழைத்து நாங்க ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினோம். திடீரென ஒரு நாள் கிரேசி மோகன் வந்து, "சார், நாம வேற ஒரு படம் பண்ணலாமா?"னு கேட்டார். "ஏன் சார், கதை நல்லாதானே வருது. ஸ்க்ரிப்ட் ரெடியாயிருச்சு, மந்திரி குமாரன்னு டைட்டிலெல்லாம் வேற யோசிச்சுட்டோம்" என்று நான் கேட்டேன். "அதில்ல சார்... நேத்து வெளியில நின்னு பேசிக்கிட்ருந்தோம்ல... ஒரு கார் மேல சாஞ்சுருந்தோம். ஸ்க்ரிப்டை கார் மேல வச்சிருந்தேன். நான் வெத்தல பாக்கு போட்டேன். கார் கெளம்பி போயிருச்சு, நானும் வீட்டுக்குப் போயிட்டேன்" என்றார். "என்ன சார் சொல்றீங்க?" என்று நான் அதிர்ச்சியாகக் கேட்டு, "சரி, திரும்ப அதே ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணலாம்" என்று சொல்ல, "இல்ல சார்... அது வேணாம். அதை யார் பார்த்தாலும் ஒரு சின்ன படமா கூட எடுத்துருவாங்க. நமக்கு அது வேணாம். புதுசா பண்ணலாம்" என்று சொல்லி ரெடி பண்ணதுதான் அவ்வை சண்முகி கதை.
இப்படி எல்லாத்தையும் பாசிட்டிவ்வாதான் பேசுவார். திட்டும்போது கூட நெகட்டிவ்வா பேச மாட்டார். இப்படி ஒரு சமபவம் வேற யாருக்கு நடந்துருந்தாலும் உக்காந்து அழுதுருப்பாங்க. ஆனா அவர் ஒரு நிமிஷம் கூட வருத்தப்படல. அப்படி ஒரு மனுஷன பாக்கவே முடியாது. ஒரு நாள் வந்தார். "ரஜினி சார்க்கு ஒரு கதை இருக்கு சார். இங்கிலிஷ்ல 'கோஸ்ட் டேட்'னு (ghost dad) ஒரு படம் இருக்கு. பாக்கலாமா?"னு கேட்டார். நான் "கோஸ்ட்... கீஸ்ட் எல்லாம் வேணாம் சார். ரஜினி சார் ஃபேன்ஸ் வேற"னு சொல்ல, அவர், "ஏன்... நீங்க படையப்பா பண்ணீங்க, பேய் அப்பா எடுக்க மாட்டிங்களா?"னு கேட்டார். இவ்வளவு ஸ்பான்டேனியஸா பேச வேற யாராலயும் முடியாது."