இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை கிளப்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளானது. மேலும் இவரின் கருத்திற்கு எதிர் கருத்தாக ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்ட ழகரம் தாங்கிய தமிழ் அன்னையின் புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் பதிவும் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படம் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தி மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் குறித்து ஆர் பட விழாவில் பேசிய கிச்சா சுதீப், "கன்னடத்தில் பான் இந்தியா படம் எடுக்கப்பட்டதாக சொன்னார்கள். நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "இந்தி தான் நமது தேசிய மொழி. உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால் ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள் என ஹிந்தியில் கிச்சா சுதீப்பிடம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கிச்சா சுதீப், "நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாம் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா" குறிப்பிட்டுள்ளார். அஜய் தேவ்கன் பதிவுக்கு கிச்சா சுதீப்பின் பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.