தனக்கு விருப்பமான நடிகர்கள், படத்தில் என்ன கெட்டப் போட்டு வருகிறார்களோ அதையே நிஜ வாழ்க்கையில் முயன்று பார்ப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு சினிமாவின் தாக்கம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள குளஹள்ளி கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள், கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஹெப்புலி' படத்தில் கிச்சா சுதீப் வைத்திருந்த ஹேர்ஸ்டைலில் முடி திருத்தம் செய்துள்ளார்கள். இதனால் சலூன் கடை ஒன்றுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "எனது பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஹெப்புலி படம் போன்றும் அல்லது ஒரு பக்கம் மட்டும் எடுத்துவிட்டு மற்றொரு பக்கம் முடி வைக்கும் ஹேர்ஸ்டைலை வெட்டுகிறார்கள். இதன் காரணமாகக் குழந்தைகள் படிப்பில் ஆர்வத்தை இழந்து, தலைமுடி எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
அப்படிப்பட்ட முடி வெட்ட வேண்டும் என்று அவர்கள் கேட்கும் போது, நீங்கள் வெட்ட வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களை வற்புறுத்தினால், அவர்களின் பெயர்களை எனக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரின் இந்தச் செயல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.