தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் ரகு தாத்தா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் ரகு தாத்தா படத்தை சுமன் குமார் இயக்கியுள்ள நிலையில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே நிறுவனத்தின் முதல் தமிழ் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் கிளிம்ஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. இரண்டாவது கிளிம்ப்ஸ் கடந்த ஜனவரியில் வெளியானது. பின்பு சில தினங்கள் கழித்து டீசர் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது.
இப்பட அறிவிப்பின் போதே, தைரியமிக்க ஒரு பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து ஒரு குடும்ப படமாக உருவாக்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி டீசரில், கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் வரும் கீர்த்தி சுரேஷ், இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் காட்சிகள், தனது வேலையில் ப்ரோமோஷனை தவிர்க்கும் காட்சிகள், மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. டீசரில் விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15ஆம் தேதி இபப்டம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அந்தப் போஸ்டரை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களைக் கவர வருகிறது! உங்களை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும், நெகிழவைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.