Skip to main content

அஜித் பட ஸ்டைலில் உருவாகும் 'காந்தாரா 2' - வெளியான சுவாரசியத் தகவல்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

kantara 2 update

 

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். சமீபத்தில் கூட கமல்ஹாசன் பாராட்டி இருந்தார். 

 

வசூலிலும் சக்கை போடு போட்ட நிலையில், மொத்தம் ரூ.350 கோடிக்கும் மேலாக உலகம் முழுவதும் வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு தனிப்பட்ட முறையில் படக்குழு சார்பில் அனுப்பப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் குழு வெளியிட்ட விருதுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் காந்தாரா படமும் இடம்பெற்றது. நாமினேஷன் பட்டியல் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதையடுத்து ரிஷப் ஷெட்டி அண்மையில் பூதகோலா விழாவில் கலந்துகொண்டு உண்மையான பஞ்சுருளியாக இருப்பவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஏற்கனவே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனப் படக்குழுவால் தகவல் சொல்லப்பட்ட நிலையில், தற்போது படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

 

இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கூறுகையில், "காந்தாரா 2-ன் கதை அதன் தொடர்ச்சியாக இருக்காது. படத்தின் முந்தைய பகுதியில் நடக்கும் கதையாக இருக்கும். கிராம மக்கள், தெய்வம் மற்றும் பிரச்சனையில் இருக்கும் ராஜா ஆகியோருக்கு இடையேயான உறவைப் பற்றி விவரிக்கும் வகையிலும் அந்த ராஜாவை சுற்றியுள்ள நிலங்களையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் விதமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். 

 

மேலும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் வெளியாகும் எனவும் அதற்கான கதை எழுதும் பணியில் ரிஷப் ஷெட்டி ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம், அதன் தொடர்ச்சியாகவே இருக்கும். ஆனால், சில படங்களில் இரண்டாம் பாகம் அதன் முந்தைய கதையை விவரிக்கும் வகையில் அமைந்து இருக்கும். தமிழில் 'பில்லா 2' படத்தின் கதை இந்த ஸ்டைலில் இருக்கும். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்போது இந்த ஸ்டைலில் உருவாகவுள்ள காந்தாரா 2 படம் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

 

 

சார்ந்த செய்திகள்