இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இப்போது 'எமர்ஜென்சி' என்ற தலைப்பில் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் படமாக இயக்கியும் நடித்தும் வருகிறார். தமிழில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் கங்கனா ரணாவத், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் எலான் மஸ்க் குறித்து தற்போது அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எனக்கு விரும்பியதை சொல்கிறேன், அதன் விளைவாக பணத்தை இழக்க நேரிட்டால், அது நடக்கட்டும்" என எலான் மஸ்க் பேசிய பேட்டி ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அதனை மேற்கோள்காட்டி கங்கனா, "இதுதான் பண்பு, உண்மையான சுதந்திரம் மற்றும் வெற்றி. நான் இந்து மதத்திற்காகப் பேசியது, அரசியல்வாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிராக பேசியதற்காக நான் கமிட்டான 20-25 கம்பெனிகள் ஒரே இரவில் என்னை அதிலிருந்து நீக்கிவிட்டனர். இதனால் வருடத்திற்கு ரூ.30 முதல் 40 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
ஆனால் நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் விரும்புவதை கூற யாரும் தடுக்க முடியாது. இதே போல் தனக்கு பிடித்ததை செய்யும் எலான் மஸ்க்கை நான் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.