இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே ப்ரைம் புரடைக்ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் இளையாரஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கமல் பேசுகையில், “ஒரு டைரக்டருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பம் எனக்கும் இருக்கிறது. அவர் தான் இளையராஜா என முதலில் எனக்கு தெரியாது. பின்பு உங்களுடைய இசைக்கு ரசிகன் என ஆரம்பிச்சு, அண்ணன், ஐயா என தொடர்ந்தது.
குணா படத்தில், குணாவுக்கும் அபிராமிக்கும் ஒரு காதல் பாட்டு போட்டு கொடுத்துருக்கார் என எல்லாரும் நினைச்சிகிட்டு இருக்காங்க. அப்படி இல்லை. அது எங்களுடைய காதல் பாட்டு. என் கண்மணிக்கு நான் எழுதிய கடிதம், அதற்கு இசையமைத்து விட்டார். அவருடைய வாழ்க்கையை 8 பாகமாக கூட எடுக்கலாம். ராஜாவை பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு வகையான படம். எப்படி எடுத்தாலும் இசை மேதை என்பவர் தனித்து நிற்பார். இதை பிடிக்காதவங்களால் கூட மறுக்க முடியாது. அவர் 6 அடியெல்லாம் கிடையாதுங்க என பிடிக்காதவர்கள் சொல்வார்கள். ஆனால் அவருடைய 1அடி பாட்டு கேட்டால் போதும்.
எனக்கு இசை புரியும். ஆனால் அதில் பேராசை கிடையாது. அதனால் அவர் மேல் பொறாமையே கிடையாது. அவர் செய்வதெல்லாம் நானே செய்தது போல சந்தோஷம். எங்க அப்பாவிற்கு பாடவே வராது. ஆனால் ரசிப்பார். அவர் தான், அவருக்கு பாட வரவில்லை என சொல்லி உங்களுக்கு வருது... போய் கத்துக்கங்க என்றார். எங்க அப்பாவுடைய நிலையிலிருந்து தான் இளையராஜாவை பார்க்கிறேன். எனக்கு வராதது எல்லாமே அவருக்கு வருகிறது. எப்படி இது என ஆச்சர்யப்பட்டுகிட்டே பல வருடங்கள் கடந்துவிட்டன.
இளையராஜவை பத்தி பல கோணங்கள் இருக்கிறது. அவர் கூட வேலை பார்த்தவங்க சொல்கிற கதை, இசையமைப்பாளர்கள் சொல்கிற கதை, இசை தெரியாமல் இளையராஜாவை டைரியாக வைத்திருப்பவர்கள் சொல்கிற கதை என சொல்லலாம். இன்று நான் பிறக்கவேயில்லை என்றாலும் இன்னும் ஒரு நூறு வருஷம் கழித்து பிறந்திருந்தாலும், அவர் வாழும் காலத்தில் தான் வாழ்ந்திருப்பேன். ஏனென்றால் அவர் என்பது அவருடைய இசை. இயக்குநர் ரொம்ப அழுத்தத்தை எடுத்துக்க வேண்டாம். உங்கள் பார்வையில் உங்களுக்கு சொல்ல தோனுகின்ற அந்த நிஜத்தை சொல்லுங்கள். இந்த படம் வெறும் இளையராஜா பற்றி சொல்லும் படமல்ல. பாரத் ரத்னா இளையராஜாவை பற்றிய படம். இது வாழ்த்து இல்லை. கோரிக்கை” என்றார்.