Skip to main content

"மாற்றுக்கருத்து என்பது எல்லா படங்களுக்கும் இருக்கும்" - பொன்னியின் செல்வன் 2 குறித்து கமல்ஹாசன்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

kamal about ponniyin selvan 2

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 28.04.2023 அன்று வெளியான படம் பொன்னியின் செல்வன் 2. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 4 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. 

 

இந்த நிலையில் இப்படத்தை மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரோடு இணைந்து பார்த்துள்ளார் கமல்ஹாசன். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் ஒரு சினிமாவின் ரசிகன். அது தான் என்னுடைய முதல் அடையாளம். சினிமா கலைஞன் என்பது இரண்டாவது அடையாளம். என்னுடைய முதல் ஆசை எல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும். அது நான் நடித்த படமென்றாலும் சரி, மற்றவர்கள் நடித்த படங்கள் என்றாலும் சரி. அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும்.

 

அத்தகைய சினிமாவாக அமைந்திருக்கிறது பொன்னியின் செல்வன் 2. இதை ஒரே படமாக தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் இரண்டு பாகங்களையும் பார்க்கும் போது ஒரு காவியம் என்று தான் சொல்ல வேண்டும். கருத்து வித்தியாசங்கள் மற்றும் மாற்றுக்கருத்து என்பது எல்லா படங்களுக்கும் இருக்கும். அது இப்படத்தில் இருந்தாலும் கூட மக்கள் இப்படத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். 

 

தமிழ் சினிமாவின் பெருமையும் தமிழரின் பெருமையும் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கே தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம். அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து வாள் கொடுத்து உதவியிருக்கிறது அந்த நட்சத்திர பட்டாளம். இது போன்று பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

 

நல்ல ஒரு பொற்காலம் துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். அதை நீங்களும் அவ்வழியே நடத்திச் செல்ல வேண்டும். படம் முடியும் போது எண்ட் கார்டில் வரும் பெயர்களைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கானோர் பாடுபட்டிருக்கிறார்கள். அதை பார்க்கும் போது தான் முழு இந்தியாவும் நம் கண் முன்னே நிற்கிறது. வட நாடு, தென்னாடு, தாய்லாந்து மற்றும் பல நாடுகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் பணியாற்றியுள்ளார்கள். இது சாதாரணமான விஷயம் அல்ல. இப்படம் போற்றப்பட வேண்டிய படம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்