மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் மணிரத்னம், பார்த்திபன், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஜெயம் ரவி படக்குழுவினரை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் ஐஸ்வர்யா லட்சுமி பற்றி கூறுகையில், "அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கும் அவங்களுக்கும் சில காட்சிகள் இருக்கிறது. ஒரு காட்சியில் கயிறு கூட இல்லாமல் யானை மேல் ஏறினாங்க. அது சாதாரணமான விஷயம் இல்லை. ஜாக்கி ஜான் போன்று அவுங்க செயல்பட்டாங்க. அவங்களுடைய மற்றொரு வெர்ஷனை நான் அப்போது தான் பார்த்தேன். நான் யானை மேல் முன்னாடி உட்கார்ந்திருந்தேன். அவுங்க பின்னாடி உட்காந்திருந்தாங்க. அப்போது ஒரு சப்போர்ட்டுக்கு என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு ஒரு ராஜாவை அப்படி யாரும் தொட்டுவிட முடியாது என்று சொன்னாங்க. அப்போது கூட அந்த கதாபாத்திரமாகவே இருந்தாங்க. என்னம்மா நீ இப்படி இருக்கியேம்மா...என சொல்லிவிட்டு பெருமைப்பட்டேன். இதுபோன்று அவங்களுக்கு 100 நல்ல படங்கள் வர வேண்டும். அவங்களோடு ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.
த்ரிஷா பற்றி கூறுகையில், "இப்போது டிவி (TV) த்ரிஷா வைரஸ் என புதுசாக வைரஸ் வந்திருப்பதாக ட்விட்டரில் சொன்னாங்க. அது வந்தால் போகமாட்டேங்குதாம். மனசுக்குள்ள வந்துவிடுகிறதாம். காலையில் இருந்து இரவு வரை அந்த வைரஸ் இருக்கிறதாம். அந்த வைரஸ் போக வேண்டாம். நான் மனசுக்குள்ளயே வச்சுக்கிறேன் என பல பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க" என்றார். மேலும் த்ரிஷாவை பார்த்து, "இதுபோன்று ஒரு வைரஸை பரப்பாதீங்க. உங்க வைப்-அ பரப்புங்க. த்ரிஷாவை நாங்க எப்போதுமே ரசிப்போம். இப்போ தைரியமாக சொல்வேன் என்னுடைய தங்கச்சி என்று. ஏனென்றால் படத்தில் தங்கச்சியாக நடித்திருக்காங்க. சின்ன வயசிலிருந்தே ஒன்றாக பார்த்து வருகிறோம். பழகி வருகிறோம். அந்த அன்புக்கு நன்றி" என்றார்.