செங்கடல், மாடத்தி போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் லீனா மணிமேகலை 'காளி' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் லீனா மணிமேகலை இந்து மதத்தை அவமதிப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பன்முக கலாசாரத்தை கொண்டாடும் வகையில் கனடாவில் 'ரிதம்ஸ் ஆஃப் கனடா' என்ற திருவிழாவில் காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் மத உணர்வை அவமதித்ததாக, இந்து தலைவர்களிடம் இருந்து தங்களுக்கு புகார் வந்ததாக கூறி கனடாவிற்கான இந்திய தூதரகம் காளி படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அதில் படம் தொடர்பான அனைத்து விஷங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.