இயக்குநர் பால்கி, கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு ஆங்கில இணையதளத்தில் இளையராஜா பயோ பிக் உருவாக ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அந்த பேட்டியில், "இளையராஜாவின் வாழ்க்கை கதையை தனுஷை வைத்து படமாக எடுப்பது என் கனவு. 3 தசாப்தங்களாக இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என 1000 படங்களுக்கு மேல் பின்னணி இசையமைத்த இளையராஜா போல் தனுஷின் முகம் இருக்கும்.
லண்டன் பில்ஹார்மோனிக் இசைக்குழுவிற்காக சிம்பொனியை வாசித்த முதல் ஆசிய நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தனுஷ் மேஸ்ட்ரோவாக நடிப்பது எங்கள் இருவருக்குமே கனவு நினைவாகும் தருணம். மேலும் தனுஷின் 40வது பிறந்தநாளில், இந்த படத்தை நான் எடுத்தால், அது தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். ஏனென்றால் என்னைப் போலவே ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகர்களில் அவரும் ஒருவர்" என்றார்.
இந்த நிலையில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025 நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளனர். இயக்குநர் பற்றி எந்த விவரமும் குறிப்பிடவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.