இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகவுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகியது. கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் இளையாரஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025ன் நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அப்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் படபூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் இளையராஜா, கமல், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘இளையராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இவ்விழாவில் தனுஷ் பேசியதாவது, “எண்ணம் போல் வாழ்க்கை என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நம்மில் பல பேர் இரவு தூக்கம் வரலைன்னா இளையராஜா சார் பாட்டை கேட்போம். அதில் மெய்மறந்து தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள், இளையராஜா சார் போல் நடிச்சால் எப்படி இருக்கும் என நினைச்சு பார்த்துட்டு தூக்கம் இல்லாமல் இருந்திருக்கேன். நான் இரண்டு பேரோட வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஒன்னு இளையராஜா, இன்னொன்னு ரஜினிகாந்த். ஒன்னு நடக்கிறது.
இந்த இடத்திற்கு வந்ததும், இந்த வாய்ப்பு கிடைச்சதும் மிகப் பெரிய கர்வத்தை கொடுக்குது. நான் இளையராஜா சாரோட ரசிகன், பக்தன். அவருடைய இசை தான் எனக்கு துணை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத் தாண்டி அவருடைய இசை, எனக்கு நடிப்பு ஆசானும் கூட. எனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியாத காலத்திலிருந்து இப்ப வரைக்கும் ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்னாடி, அந்த காட்சிக்கு தகுந்த மூட்ல இருக்கிற ஒரு இளையராஜா பாட்டை அல்லது பின்னணி இசையையோ கேட்பேன். அந்த இசை அந்த காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என சொல்லும். அதை அப்படியே உள்வாங்கி நடிப்பேன். வெற்றிமாறன் சில தடவை அதை பார்த்திருக்கார். இப்பவும் இது மிகப்பெரிய சவால், பொறுப்பு என சொல்றாங்க. எனக்கு அப்படி தெரியவில்லை. இப்பவும் அந்த இசை எனக்கு அவராகவே நடிக்க வேண்டும் என சொல்லும். அவரை நான் இவ்வளவு வருஷமா பின்பற்றி வருகிறேன். அவர் எப்போதுமே கூடவே இருக்கார். இருப்பார்.
ஒரு நடிகனா இந்த வாய்ப்பு எனகு கிடைச்சது ஒரு அங்கீகாரமாக நினைக்கிறேன். அந்த அழைப்பு இளையராஜா சார்கிட்டயிருந்தே வந்தது. அது எனக்கு இன்னும் சந்தோஷத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுக்குது. இசையாகவே, இசையின் ஞானியாகவே, இசையின் கடவுளாகவே நடிக்கக்கூடிய வாய்ப்பை சிவன் எனக்கு கொடுத்திருக்கார்.