சினிமாவை மிரள வைத்துக்கொண்டிருக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்' இணையதளம் புது படங்களை வெளியான அன்றே திருட்டுத்தனமாக தன் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றது. மக்களும் திரையரங்குகளுக்கு செல்லாமல் கணினியிலோ, அல்லது கைபேசியிலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்து விடுகின்றனர். இதனால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம் இந்த 'தமிழ் ராக்கர்ஸ்' இணையதளம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றொரு புறம் இவர்களுக்கு எப்படி வருமானம் வருகிறது என்றால் அது விளம்பரங்கள் மூலம்தான். மாதம் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இருந்தும் இந்த விளம்பர கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டால் கூட இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
செல்போனில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகுதான் தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தமிழ் ராக்கர்சில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. பல வழக்குகள் மற்றும் போலீஸ் நடவடிக்கை இருந்தபோதிலும், இந்த இணையதளம் அனைத்தையும் மீறி புதிய படங்களை வெளியிட்டு விடுகிறது. இது எப்படி தமிழ் ராக்கர்சால் முடிகிறது. அது எப்படி இயக்குகிறது என்றால் உலகளாவிய ரீதியில் இதனுடைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்களிப்பு செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர்கள் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் சென்று படம் பார்க்கும் சமயம் படங்களை வீடியோ பதிவு செய்து புது படங்களை பதிவேற்றம் செய்வதாக ஆதாரம் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் செய்த வீடியோ பதிவு பணிக்காக பணம் பெறுகின்றனர்.
மேலும் இவர்கள் இன்னமும் சிக்காததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, 'தமிழராக்கர்ஸ்' வலைத்தளமானது அதன் யுஆர்எல்-ஐ அடிக்கடி மாற்றியமைத்து கொள்வதாகும். உதாரணமாக tamilrockers.com என்று இருக்கும் யுஆர்எல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனே tamilrockers.cl என்று மாற்றிவிடுவார்கள். மேலும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட யுஆர்எல் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வலைத்தளம் இன்னொரு யுஆர்எல்-க்கு உடனடியாக மாறுகிற காரணத்தால் இதுவரை தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கண்டுபிடிக்க இயலவில்லை. மேலும் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவும் இதற்கு அமோகமாக இருப்பதாலும் ஒன்னும் செய்யமுடியவில்லை. எது எப்படியோ அரசும், திரையுலகமும், மக்களும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் இதற்கு கண்டிப்பாக தீர்வு வர வாய்ப்புள்ளது. அதற்கு முதல் முயற்சியாக தியேட்டர் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல் விலையையும் வெகுவாக குறைத்தால் நன்று.