Skip to main content

வீழ்ந்துவிட்டாரா சூர்யா?

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

surya

 

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான படம் காப்பான். சூர்யா - இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் இதுவாகும். முதன் முதலில் இவர்கள் கூட்டணியில் உருவான ‘அயன்’ படம் பெரிய வெற்றிபெற்றது. ஏ.வி.எம். நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் ’மாற்றான்’ வெளியானது. அயன் அடைந்த வெற்றியினால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ஒரளவிற்குதான் பேசப்பட்டது. மூன்றாவதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ’காப்பான்’ படத்திற்கு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்தன.

 

‘காப்பான்’ படத்திற்கு முன்பாக வெளியான படங்களான ’என்.ஜி.கே’, ’தானா சேர்ந்த கூட்டம்’, ’24’, ’மாசு என்கிற மாசிலாமணி’, ’அஞ்சான்’ உள்ளிட்ட படங்களும் சூர்யாவிற்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இந்த வரிசையில் ஹரி இயக்கத்தில் வந்த சிங்கம்-3 மட்டுமே வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் சிலர், சமீபத்திய அரசியல் பேச்சுகளால் சூர்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது எனவும், சூர்யாவின் சினிமா பயணம் அவ்வளவுதான் எனவும் பேசினர். அவர்கள் பேசும் அளவிற்கு சூர்யா வீழ்ந்துவிட்டாரா என்ன?

 

vijay surya

 

சரி, இப்போது வீழ்ந்துவிட்டதாகச் சொல்லப்படும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்தது. வாரிசு நடிகராக இருந்தாலும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் மிகக் கடினமானதாகவே இருந்தது. முதல் படமான ‘நேருக்கு நேர்’ வெற்றி பெற்றாலும் அதற்குப் பிறகு நாயகனாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பிறகு ‘நந்தா’ திரைப்படம்தான் ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது. கமர்ஷியல் வெற்றி என்றால் அது ‘காக்க காக்க’வில் இருந்துதான் - இதுதான் முறையான கமர்ஷியல் வெற்றி.

 

அதற்கு முன்புவரை நடிக்க தெரியாதவர், நடனமாட தெரியாதவர், உயரமாக இல்லை என்று பலவிதமாகக் கிண்டல் செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் தாண்டி கடினமாக உழைத்து முன்னணி ஹீரோவானார் சூர்யா. தமிழ் சினிமா வரலாற்றைக் கவனித்தவர்களுக்குத் தெரியும் அதில் வெற்றி நாயகர்களாக திகழ்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. ஆரம்பக்கட்டம், சற்று கடுமையாகவும், கரடுமுரடாகவும் இருந்து அதைத் தாண்டி விடாமுயற்சியோடு தொடர்ந்தவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும்.

 

இப்படித் தோல்விகளைக் கடந்து முன்னணி நாயகனான சூர்யா நடிப்புடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது 'அகரம்' அறக்கட்டளை மூலமாக வாய்ப்பிழந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்து கைத்தூக்கிவிடுகிறார். சமீப காலமாக பல்வேறு பொது பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மேலோட்டமானவை அல்ல. இப்படிக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வரும் சூர்யாவிற்கு இந்த இடைவெளி ஒரு வீழ்ச்சி அல்ல. இப்போது ‘சூரரைப் போற்று’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

“ஒரு தடவ ஷூட்டிங் முடிச்சிட்டு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் அசதியில் தூங்கிவிட்டேன். திடீரென எழுப்பிய ரகுவரன் சார் ‘உனக்கு எப்படிடா தூக்கம் வருது. இன்னும் எதையும் சாதிக்காம’ என்று கேட்டார். அன்றிலிருந்து நான் சினிமாவில் வெற்றிபெறும்வரை சரியாகத் தூங்கியது கிடையாது”- இது சூர்யா ஒரு பேட்டியில் கூறியது. இப்படிப்பட்ட அவர் மீண்டும் தன்னிடத்திற்கு வருவார். வரும்வரை உறங்க மாட்டார்!

 

 

சார்ந்த செய்திகள்