இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் எம். ராஜேஷ் மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிரதர் படம் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அவ்வப்போது இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹாரிஸ் ஜெயராஜ், நாளை சென்னையில் நடத்தவுள்ளார். நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20,000 பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் செய்கிறது. கடந்த மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது. அதனைக் கருத்தில் கொண்டு போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.