'ஹர்காரா' திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் அருண் காஸ்ட்ரோ அவர்களுடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஒரு சிறப்பு நேர்காணல் நடைபெற்றது. அதில் படம் பற்றிய தகவல்களை, அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் கதை என்னுடைய நண்பரின் சிந்தனையில் உதித்த ஒன்று. அது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். தபால் அனுப்பும் பழக்கம் எல்லாம் முடிந்துவிட்டது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இப்போதும் அது அதிகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மலை கிராமங்களில் தபால்துறை மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதை மையப்படுத்திய கதையாக இது இருக்கும். என்னுடைய சொந்த ஊர் தேனி. நான் பார்த்து வியந்த பல கேரக்டர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளேன்.
டெக்னாலஜி வந்த பிறகு வெளிநாட்டில் நடக்கும் விஷயங்களைக் கூட நாம் தெரிந்துகொள்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள், குலசாமி பற்றி எல்லாம் நாம் தெரிந்துகொள்வதில்லை. ஒரு தபால்காரர் ஏன் குலசாமியாக கொண்டாடப்படுகிறார் என்பதே இந்தக் கதை. மலைக்கு மேல் நடந்து செல்வது தான் கடினம். ஆனால் அங்குள்ள கிராம மக்களே எங்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தனர். எனவே அங்கு ஷூட்டிங் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. வேறு எந்த சவாலையும் நாங்கள் அங்கு சந்திக்கவில்லை.
இன்று படம் எடுப்பதற்கான வசதிகள் அதிகமாகியுள்ளன. இப்போது செல்போனிலேயே படத்தை ஷூட் செய்யலாம். ஆனால் அதை வியாபாரம் செய்து, மக்களைப் பார்க்க வைப்பது சவாலான விஷயம். ஒரு கேரக்டருக்கு என் போன்ற உடலமைப்பு தேவைப்பட்டதால் அதில் நானே நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இயற்கையைக் காப்பது குறித்து என்னால் முடிந்த அளவுக்கு சின்னச் சின்ன வசனங்களின் மூலம் படத்தில் தெரிவித்துள்ளேன். மலைவாழ் மக்கள் இயற்கையோடு மிகவும் ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுடைய இடத்திலிருந்து அவர்களைப் பிரிப்பது தவறு. காளி வெங்கட் சாரும் நானும் அமர்ந்து ஸ்கிரிப்ட் குறித்து இரண்டு நாட்கள் முழுமையாக விவாதத்தில் ஈடுபட்டோம். அப்போதே அவருடைய மனதுக்குள் அவருடைய கேரக்டர் வந்துவிட்டது. அவரை நடிக்க வைக்க முடிவு செய்தது இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவுகளில் ஒன்று. நாங்கள் ஷூட் செய்த பகுதியில் இருந்த மலைவாழ் மக்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். மனித உணர்வுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை முடிந்த அளவு இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.