Skip to main content

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்... முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! 

Published on 05/04/2018 | Edited on 06/04/2018
theater


கடந்த 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக கோட்டைக்கு ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக விஷால் அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடெங்கும் காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடப்பதால் கோட்டைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜுவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.உடன் பெப்சி தலைவர் செல்வமணி, தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உதவ வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். பிறகு இது குறித்து  அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியபோது... "அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். திரைப் பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என்று உறுதி அளித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய விஷால்...."திரை உலகினர் பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ராஜு உறுதி அளித்துள்ளார். மேலும்  இதன்மூலம் எங்கள் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்