திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் (நேற்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும்.
இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... "ஒளிப்பதிவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் செயல்படுத்தப்பட்டால் கலை துறையில் பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக அமையும். கருத்துச் சுதந்திரத்திற்காக நாம் நிற்கிறோம் என்பதை காட்ட தயவுசெய்து உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்" என பதிவிட்டார்.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "எப்படியும் இந்த நாட்களில் எந்தத் திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும் 4 பாடல்களும் 4 சென்டிமென்ட் காட்சிகளும் 2 மாஸ் ஓப்பனிங் காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்?" என பதிவிட்டுள்ளார்.