Skip to main content

"உதவி தேவைப்படும் பெண்களுக்காக உங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும்" - விஷால் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

vgegaesg

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாகக் கலந்துகொண்டது, மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் புகார்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலன், தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில், இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிஎஸ்பிபி பள்ளி இழுத்து மூடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மாற்றுவது இழிவானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியும். குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்" என கண்டனம் தெரிவித்தார்.

 

இந்நிலையில் நடிகர் விஷாலின் கருத்துக்குப் பதில் கருத்து பதிவு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். அதில்... ''முதலில் சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களையும் கண்டியுங்கள். சினிமாவில் புதிதாக வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். முன்னணி நடிகைகளுக்கும் தொல்லைகள் கொடுக்கப்படுவதைப் பாருங்கள். உங்களாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா துறையில் உதவி தேவைப்படும் பெண்களுக்காக உங்கள் வீரத்தை காட்டி இருக்க வேண்டும்" கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்