கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதன் முறையாக கெளதமுடன் இணைந்து பணியாற்றினார். படத்தின் முழு ஆல்பமும் எவர்கிரீன் ஹிட்டானது. படமும் இளைஞர்கள் கொண்டாடும் க்ளாஸிக் படங்களின் வரிசையில் இணைந்தது.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பத்து ஆண்டுகளை, இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்த நிலையில் வி.டி.வி. ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்ப, இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வி.டி.வி. படத்தின் தொடர்ச்சியாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ரிலீஸானது. 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் முழுக்க ஒரு தொலைபேசி உரையாடலாக இருக்கிறது. மேலும், ரஹ்மானின் மியூசிக் அந்த வி.டி.வி. மேஜிக்கை இப்போதும் தந்திருகிறது. இந்த வீடியோ இதுவரை 5 மில்லியன் கடந்து பார்வையாளர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன்....
'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தும்தான் இயக்குனர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர், திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியைப் பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பயணம் தொடரும்'' என்றார்.