தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சில படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடத்தில் இவர் நடித்த ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), கர்ணன் (தமிழ், 1964) மற்றும் தான வீர சூர கர்ணன் (1977) உட்பட 17க்கும் மேற்பட்ட படங்கள் இவரை தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் ஆக்கியது.
நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். 1984 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அவருக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்து தமிழக மக்களிடமும் பிரபலமானார். இந்த நிலையில் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாளை விஜயவாடாவில் இன்று கொண்டாட உள்ளனர். விழா குறித்து என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த பிறந்தநாள் நிகழ்விற்காக தமிழகத்திலிருந்து விஜயவாடா சென்ற ரஜினிகாந்திற்கு விமானநிலையத்தில் நடிகர் பாலகிருஷ்ணா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற பாலகிருஷ்ணாவை ரஜினிகாந்தை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.