மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். தனது நடிப்பின் முலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். தமிழிலும் சிவகார்த்திகேயனின் வேலைக்கரன் மூலம் அறிமுகமாகி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அருஜூனின் புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஃபகத் ஃபாசில், ADHD (Attention deficit hyperactivity disorder) எனப்படும் கவனக்குறைவு அல்லது அதிக செயல்பாடு குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் தேதி, கேரளாவின் கொத்தமங்கலம் பகுதி அருகே உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார். அப்போது பேசிய அவர், “இந்த இடத்தை நான் சுற்றிப் பார்க்கும் போது, சபித் என்னுடன் வந்தார். அவரிடம் ADHD எனப்படும் நரம்பியல் குறைபாடு உள்ளது. அதைக் குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். குழந்தை பருவத்தில் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றார். 41 வயதில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியுமா என்றேன். பின்பு எனக்கு ADHD இருப்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது. அது பெரியதாக இல்லாவிட்டாலும், எனக்கும் சில குறைபாடுகள் உள்ளன” என்றார்.
ஏ.டி.எச்.டி (ADHD) என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது குறைபாடே ஆகும். இது பொதுவாக குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படுகிறது. ஏ.டி.எச்.டி உள்ள குழந்தைகளுக்கு கவனம் செலுத்துதல், அதிக சுறுசுறுப்பு மற்றும் அவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். இதை குணப்படுத்த முடியாது, ஆனால் அதைச் சிகிச்சை மற்றும் மருந்து மூலம் சமாளித்துக் கொள்ள முடியும்.