இந்தியாவின் மிகப்பெரிய ஓ.டி.டி. பிளாட்ஃபார்மாக இருப்பது ஹாட்ஸ்டார். இந்த செயலியை கடந்த வருடம், டிஸ்னி நிறுவனம், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை வாங்கும்போது அதனுடன் இதையும் தக்க வைத்துக்கொண்டது.
இந்நிலையில் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் டிஸ்னி நிறுவனம் படங்கள் தயாரிப்பது, தீம் பார்க் என்று அனைத்து துறைகளில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில், கடந்த வருடம் டிஸ்னி ப்ளஸ் என்ற ஓ.டி.டி. நிறுவனத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அந்தத் துறையின் தற்போதைய ஜாம்பவான்களான நெட்பிளிக்ஸ், அமேசான் நிறுவனங்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.டி.டி. சந்தையில் மிகப்பெரிய லாபம் தரும் சந்தையாக இந்தியா உருவாக உள்ளது. இந்நிலையில் அமேசானும், நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் தங்களுக்கான இடங்களை இந்தியாவில் பிடித்துவிட்டது. கடந்த வருடம்தான் அறிமுகமானாலும் டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் அமெரிக்காவின் அதிக ஓ.டி.டி. வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக திகழ்கிறது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஓ.டி.டி. நிறுவனமாக இருக்கும் ஹாட்ஸ்டாருடன் இணைந்து டிஸ்னி ப்ளஸ் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. டிஸ்னி ப்ளஸ்ஸில் டிஸ்னி, மார்வெல், பிக்ஸார், ஸ்டார் வார்ஸ் மற்றும் நேஷனல் ஜாகரஃபி உள்ளிட்டவை தயாரித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பலரால் பேசப்படும் எட்டு மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் நிகழ்ச்சிகள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
டிஸ்னி ப்ளஸ் மார்ச் 29ஆம் தேதி ஐ.பி.எல். போட்டிகளைக் குறிவைத்து இந்தியாவில் அறிமுகமாகுவதாக இருந்தது. ஆனால், கரோனாவால் இந்த போட்டிகள் இந்தியாவில் தள்ளிப்போயிருப்பது டிஸ்னி நிறுவனத்திற்கு ஏமாற்றம்தான். இதை வைத்துதான் இலவசமாக பயன்படுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ப்ரிமியம் வாடிக்கையாளர்களாக மாற்ற திட்டம் தீட்டியிருந்தது டிஸ்னி. இருந்தாலும் பரவாயில்லை என்று திடீரென ஏப்ரல் 3ஆம் தேதி களத்தில் இறங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் இதுவரை எந்தவித புது ஆஃபர்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.