Skip to main content

"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்" - ராம்

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த இயக்குனரான பாலுமகேந்திராவின் பிறந்தநாள் இன்று. அவர் மறைந்து ஆண்டுகளாகியும் அவரது படைப்புகளும் அவரிடம் கற்றறிந்து இன்று தமிழ் திரையுலகை கலக்கி வரும் அவரது சீடர்களும் அவரை என்றும் நினைவுபடுத்துகின்றனர். அவரிடம் பணியாற்றியவர்களில் ஒருவரான இயக்குனர் ராம், பாலுமகேந்திரா குறித்து பகிர்ந்த சில விஷயங்கள்... 
 

balumahendran


"மட்டக்கிளப்பிலிருந்து கிளம்பி புனேவுக்கு சென்று பரிபூரணமாக சினிமாவை கற்றுக்கொண்டவர் எங்களுடைய இயக்குனர் பாலுமகேந்திரா. எனக்கோ, பாலாவுக்கோ, வெற்றிமாறனுக்கோ, மீரா கதிரவனுக்கோ, சீனு ராமசாமிக்கோ மட்டுமில்ல எத்தனையோ இயக்குனர்களுக்கான ஃபிலிம் லாங்குவேஜை அவர்தான் உருவாக்கி இருக்கிறார். இதை நாங்க உறுதியா நம்புவோம். இன்னும் சொல்லப்போனால் இயக்குனர் மகேந்திரனுடைய முதல் படத்தினுடைய ஃபிலிம் லாங்குவேஜ் பாலுமகேந்திராவுடையது. இயக்குனர் மணிரத்னத்தின் முதல் சினிமா தொடங்கியது அவரிடம் இருந்து. சினிமா என்ற கலையை கலையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர் பாலு மகேந்திரா சார்தான். 
 

அவருடைய படங்கள் அனைத்திலும் இலக்கிய பரிச்சயம் இருந்தது. அவரை வந்து சந்திக்கும் அனைவரிடமும் அவர் கண்டிப்பாக சொல்வது புத்தகங்கள் வாசியுங்கள் என்பதுதான். வெற்றிமாறன் அவரிடம் துணை இயக்குனராக சேர்ந்தபோது எல்லாம் பெரிய சைஸ் புத்தகம் ஒன்றை வெற்றி கையில் கொடுத்து சினாப்ஸிஸ் எழுதிவரச் சொன்னார் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்கு அதுபோல ஒன்றும் நடக்கவில்லை. நான் அவரிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கேட்டு சென்றபோது, அவர் 'பக்கத்து தெருவில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இருக்கிறார். அவர்தான் தற்போது அடிக்கடி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். நான் படம் பண்ண 3 வருடம் ஆகும்' என்று அனுப்பிவிட்டார். அதன்பின் அவரிடம் ஒரு படத்தின் திரைக்கதை விவாதத்திற்காகத்தான் சென்றேன். அந்தப் படத்திற்கு அவரை ஒளிப்பதிவாளராக இருக்கும்படி கேட்டேன். அதன்பின் என்னை அவருடைய துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார். 
 

net ad


ஒரு படம் முடித்தபிறகு அவரிடம் அந்த படத்தை போட்டுக்காட்ட வேண்டும் என்று நினைப்பேன். 'கற்றது தமிழ்' படத்தை அவரிடம் முதலில் போட்டுக்காட்டியபோது ஆசிய சினிமாவில் முதல் ஐந்து இடத்தில் கண்டிப்பாக இது வரும் என்றார். 'தங்கமீன்கள்' படத்தை பார்த்து மிகவும் கேவலமான படம் என்றார். என்னுடைய 'தரமணி' படத்தை போட்டுக்காட்ட முடியவில்லை என்பதைவிட 'பேரன்பு' படத்தை போட்டுக்காட்ட முடியவில்லை என்றுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது".

 

 

சார்ந்த செய்திகள்