
விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று(27.03.2025) வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று(26.03.2025) இப்படத்திற்கு எதிராக படத்தில் முதலீடு செய்துள்ள பி4யூ(B4U) என்ற தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் பி4யூ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் டிஜிட்டல் உரிமையை விற்பதற்கு முன்னதாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்ததால், ஓ.டி.டி.க்கு விற்க முடியவில்லை என கூறி முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என பி4யூ நிறுவனம் கோரிக்கை வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வந்த நிலையில் படக்குழு பி4யூ நிறுவனத்துக்கு ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்குத் நீடித்து நீதி மன்றம் உத்தரவிட்டது. பின்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரியா ஷிபு நேரில் ஆஜராகி பி4யூ நிறுவனத்துடன் சுமூகமாக பேச்சு வார்த்தை முடிந்து புது ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். அதனடிப்படையில் படத்திற்கு தடையை நீதிமன்றம் நீக்கியது.
இந்த நிலையில் இப்படம் மாலையில் இருந்து வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “வீர தீர சூரன் மாலையில் இருந்து தியேட்டரில் திரையிடப்படுகிறது. எங்க அப்பா காலையில தியேட்டருக்கு போய்டு டிக்கெட் எடுப்பதற்காக நின்னு ஷோ கேன்சல் ஆனதும் திரும்பி வீட்டுக்கு போயிருக்கிறார். அதில் இருந்து விக்ரம் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் எவ்வளவு இன்னல்களை இது உண்டாகியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் அனைவரிடமும் படக்குழு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். காலையில் இருந்து தியேட்டரில் ஆரவாரத்துடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கும் இந்த பிரச்சனையில் உறுதிணையாக நின்ற தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்றார். அதே போல் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் தங்களது எக்ஸ் பக்கத்தில் படம் இப்போது தியேட்டரில் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதாகப் பதிவிட்டுள்ளது. மேலும் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படம் மாலையில் இருந்து திரையிடப்படுவதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.