இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதில் இருந்து இந்தி மொழி குறித்த விவாதங்கள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் 'இந்தி தேசிய மொழி இல்லை' என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 'இந்திதான் நமது தேசிய மொழி' என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற நடிகை கங்கண ரனாவத் இந்தி, ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. அதனால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி என பேசினார். இதையடுத்து அஜய் தேவ்கனின் லிஸ்டில் கங்கனாவையும் சேர்த்த இணையவாசிகள் பாரபட்சமின்றி வறுத்தெடுத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நடிகை சுஹாசினி மணிரத்னம், "இந்தி ஒரு நல்ல மொழி. அதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை கிளியுள்ளது.
சுஹாசினி கருத்துக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், "இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றால், அப்போ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? இதை சுஹாசினி விளக்கவேண்டும். இந்த மண்ணில் ஆரியம் மிக ஆழமாக காலுன்றியிருக்கிறது. அது ரொம்ப ஆபத்தானது. அந்த ஆரியம் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை கொண்டு வந்து கொண்டிருக்கும். இந்தி தெரியாத மக்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும். இந்தியைத் திணிப்பவர்கள் என் தேசத்தை விட்டு வெளியேற வேண்டும். மற்ற மொழி நடிகர்களை போல தமிழில் இருக்கும் உச்ச நடிகர்கள் சுயலாபத்திற்காக மொழி பிரச்சனை குறித்து பேசுவதில்லை. அப்படி பேசினால் தனக்கு இருக்கும் சினிமா வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் தான் அதற்கு காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.