Skip to main content

புதிய போஸ்டரால் பழைய சர்ச்சை - மீண்டும் பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவுக்கு எதிராக புகார்

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

Complaint filed against Prabhas and Kriti Sanon's Adipurush new poster in Mumbai

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனை தொடர்ந்து படத்தின் புதிய போஸ்டரை ராம நவமியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் ராமராக பிரபாஸ், சீதாவாக க்ரீத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் இந்த புதிய போஸ்டர் தொடர்பாக மீண்டும் இப்படத்தின் படக்குழு மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை சகினாக்கா காவல் நிலையத்தில் மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (A), 298, 500, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் புகாரை அளித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்