பேட்ட படமும், விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில் இரண்டு படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்க பட்டுள்ளது. அதில்... "இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.
சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம் என்பதால் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும். தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.