
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) நேற்று (25-03-25) மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடிகராக நடித்தார். இடையே சமுத்திரம், மகா நடிகன், அன்னக்கொடி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு ஷங்கரின் எந்திரன் படத்தில் மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்றி அதில் சிட்டி ரோபோவுக்கு டூப் போட்டிருந்தார் .
இயக்குநராக 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார். இந்த சூழலில் அவர் திடீரென மறைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜின் உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய், சூர்யா, பிரபு, வைரமுத்து, கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, கவுண்டமணி, சரத்குமார், விதார்த், நாசர், இயக்குநர் மணிரத்னம், பி.வாசு, நிழல்கள் ரவி, நாசர், கருணாஸ், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து மனோஜுடனான தனது அனுபவங்களை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது பலரும் மனோஜுக்கு நிறையக் கனவுகள் இருந்ததென்றும், இளம் வயதில் அவர் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்றும் கூறினர்.