தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சமீப காலமாக மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ச்சியாக மலையாள மற்றும் கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர் நடிப்பில், கேஸ் ஆஃப் கொண்டனா என்ற கன்னடப் படம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளியானது. இப்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஹண்ட், நடிகர், தி டோர் என்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் நடிகர் மற்றும் தி டோர் தமிழிலும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், “இது அநியாயம் மற்றும் அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை. இதை அறிந்து மிகவும் பயமாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடப்பது வேதனைக்குரியது.
இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017ல் பாவனா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் கொடுத்தார். அந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.