Skip to main content

"எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லை" - பாக்யராஜ் கவலை

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Bhagyaraj Speech at Bumper Audio and Trailer Launch

 

வேதா பிக்சர்ஸ் எஸ். தியாகராஜா தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி, ஷிவானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பம்பர்'. கேரள மாநில பம்பர் லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 

இவ்விழாவினில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு. இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே. பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.  

 

நடிகை ஷிவானி பேசியதாவது, "தயாரிப்பாளர் தியாகராஜா சார் படத்திற்குத் தேவையான அனைத்தும் கொடுத்துள்ளார். இயக்குநர் செல்வம் மிகுந்த உழைப்பை இந்த படத்திற்குக் கொடுத்துள்ளார். படம் பார்த்தால் உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும். நடிகர் வெற்றி, மற்ற படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடித்துள்ளார். அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்" என்றார். 

 

நடிகர் வெற்றி பேசியதாவது, "முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது. இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போல படம் வந்துள்ளது" என்றார்.

 

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசியதாவது, "அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள் தான் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தப் படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார். அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும்" என்று கவலையை வெளிப்படுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்