சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்களின் பெயரில் போலி முகவரி உருவாக்கி, பிரபலங்கள் போலவே கருத்துத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்புவதைச் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது மாதிரியான நபர்கள் செய்யும் செயல்களால், 'இது என்னுடைய முகவரியே இல்லை... இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு பிரபலங்கள் தள்ளப்படுகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்று அரசியல் பிரமுகர்களும் சில நேரங்களில் இது போன்ற சிக்கல்களுக்கு உள்ளாகிவிடுகின்றனர்.
அந்த வகையில், மர்ம நபர் ஒருவர் நடிகை அதுல்யாவின் பெயரில் போலி முகவரி உருவாக்கி, அதன்மூலம் திரைத்துறை பிரபலங்களுக்கு அதுல்யா போல குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். இது, அதுல்யாவின் கவனத்திற்கு வர, இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அதுல்யா அளித்துள்ள விளக்கத்தில், "யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் என்னுடைய பெயரில் போலி முகவரி உருவாக்கி எனக்குத் தெரிந்த நபர்களுக்கு ஏன் மெசேஜ் செய்கிறார் என எனக்குத் தெரியவில்லை. இது தவறானது. இது குறித்து புகாரளித்துள்ளேன். மேலும், அதிகாரப்பூர்வமாக நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.