அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்ஸாமில் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 40 லட்சம் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். இதுபோல் பீகாரில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் சாலை, ரயில் என்று அனைத்து விதமான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உணவு, உடைகள் இல்லாமலும் மருத்துவ உதவிகள் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
அஸ்ஸாமில் அதிகமான வன விலங்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளன. பிரபல சுஜிரங்கா தேசிய பூங்காவில் 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தின் சிறப்பு என்று சொல்லப்படும் கண்டாமிருகங்களும் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மக்கள் உதவி வழங்கி வருகின்றன. அஸ்ஸாம் அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து அஸ்ஸாம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ரூ. 51 லட்சம் வழங்கி உள்ளார். முன்பாக நடிகர் அக்ஷய் குமார் ரூ. 1 கோடி வழங்கி உள்ளார்.