Skip to main content

"இது தாத்தாவோடதே, அப்பாகிட்ட கேட்டு சொல்றேன்" - உதயநிதியின் தயக்கம் குறித்து இயக்குநர் பேட்டி 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

 Arunraja Kamaraj

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

"எக்ஸாம் எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனின் மனநிலையில் இருக்கிறேன். படம் நல்லபடியாக வந்திருக்கிறது. முடிவு மக்கள் கையில் உள்ளது. ஆர்டிக்கள் 15 மூல கதையில் பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை. நம் ஊருக்கு ஏற்ற மாதிரியான சின்னசின்ன மாற்றங்கள் செய்துள்ளோம். சில கேரக்டர்களை புதிதாக சேர்த்துள்ளோம். 

 

சமூக நீதி பேசக்கூடிய கதை, அதில் உதயநிதி சார் நடிக்கிறார் என்பதால் நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டில்  பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். உதய் சாரிடம் சொன்னபோது இது தாத்தாவோட டைட்டிலாச்சே என்று யோசித்தார். கதைக்கு பொருத்தமாக இருக்கும் சார், இந்தக் கதைக்கு வைக்கவில்லை என்றால் வேறு எந்தக் கதைக்கும் வைக்கமுடியாது சார் என்று கூறினேன். அப்பாவிடம் பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொன்னார். அதன் பிறகுதான் டைட்டிலை ரிஜிஸ்டர் செய்தோம். 

 

ஒடுக்குமுறை சார்ந்த வன்முறைகளுக்கு எதிரான கதை என்பதால் எங்கு எதிர்க்குரல் இல்லை என்று யோசித்தேன். தமிழகத்தின் பிற பகுதிகளில் எதிர்க்குரல் இருந்தாலும்கூட மேற்கு பகுதியில் எதிர்க்குரல் இல்லை. அங்கு சாதி என்பது வாழ்க்கையோடு ஒன்றாக பழகிவிட்டது. படத்திற்கு லொக்கேஷன் பார்க்க சென்றபோது நானே தீண்டாமையை கண்ணால் கண்டேன். அதனால் கோயம்புத்தூரை கதைக்களமாக தேர்ந்தெடுத்தேன். 

 

நல்லது பேசுவதற்கு பயப்படத்தேவையில்லை என்பதால் துணிந்து இந்தக் கதையை கையில் எடுத்தோம். இவர்தான் செய்கிறார் என்று நாம் யாரையும் குறிப்பிட்டோ, வன்மத்தோடோ சொல்லவில்லை. அந்த மாதிரியான சிந்தனைகள் தவறு என்பதை நாம் சொல்லித்தானே ஆகவேண்டும். சென்சிட்டிவான விஷயம் என்று அதை பேசாமலும் இருக்கக்கூடாது. எந்த விஷயம் செய்தாலும் அதைத் தெளிவாக செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக்கூடியவர் உதய் சார். அரசியல் பின்புலம் சார்ந்த ஒருவராக தன்னை அவர் காட்டிக்கொண்டதே இல்லை. கானா படம் பார்த்துவிட்டு இந்தப் படத்தை அருண் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததையே பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

 

இந்தப் படத்துக்காக நிறைய மூத்த பத்திரிகையாளர்கள், போலீஸ் ஆபிஸர்களை சந்தித்து அவர்களோடு விவாதித்தேன். உதய் கேரக்டருக்காக லுக் டிசைன் பண்ணிவிட்டு அவரிடம் காட்டியபோது நல்ல வரைஞ்சிருக்கீங்க, நான் எப்படிங்க இதை நடிப்புல கொண்டு வர்றது என்று கேட்டார். போலீஸ் கெட்டப் செட்டாகவில்லை என்றால் கிண்டல் செய்துவிடுவார்களோ என்று யோசித்தார். அதனால் யூனிஃபார்ம் வேண்டாமே மஃப்டிலயே நிறைய சீன் வச்சுக்கலாம் என்று சொன்னார். அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் எடுத்துச் சொன்னேன். யூனிஃபார்ம் போட்டு முதல் ஷெடியூல் எடுத்து முடித்த பிறகு அவருக்கு அந்த சிந்தனையே வரவில்லை. அந்த அளவிற்கு போலீஸ் கெட்டப் அவருக்கு பொருத்தமாக இருந்தது".

 

 

சார்ந்த செய்திகள்