Skip to main content

"ஜோசப் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்" - அர்ஜுன் சம்பத் வேண்டுகோள்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

arjun sampath about vijay political entry

 

விஜய், நடிப்பதைத் தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும், அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

இதனால், விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு" எனப் பதிலளித்தார். அண்மையில் காமராஜர் பிறந்தநாளில் விஜய் தொடங்கிய இரவுப் பாடசாலைத்திட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ், "நல்ல விஷயம் தானே. தன்னார்வலர்கள் போல் விஜய்யும் செயல்படுகிறார்" என வரவேற்றிருந்தார். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "அரசியல் என்பது வேறு. சினிமா என்பது வேறு. விஜயகாந்த் போல் யாராவது வர நினைத்தால் விளைவு மிக மோசமாகத்தான் இருக்கும். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியிருந்தார். 

 

இந்நிலையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இளம் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். குறிப்பாக, ஜோசப் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். அவரையும் நாங்கள் வரவேற்கிறோம். அதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பெரிய ரசிகர் பட்டாளத்தை விஜய் வைத்துள்ளார். ரசிகர்கள் எல்லாம் புள்ளிங்கோவா மாறி வருகிறார்கள். அதை மாற்ற வேண்டும். ரசிகர்கள் போதைக் கலாச்சாரத்திற்குப் போகாமல் பார்த்துக்க வேண்டும். லஞ்சம் ஊழலுக்கு எதிராக ரசிகர்கள் போராடுகிற ஒரு மனப்பான்மையையும் உருவாக்க வேண்டும். அரசியலுக்கு வரக்கூடிய விஜய் இத்தகைய செயல்பாடுகளைக் கொடுக்க வேண்டும் என முன்வைக்கிறேன்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்